தமிழகம்

கோவை மருதமலை அருகே நள்ளிரவில் கடை, வீடுகளிலிருந்து அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சாப்பிட்ட யானைகள்

செய்திப்பிரிவு

கோவை: யானைகள் நள்ளிரவில் கடை, வீடுகளிலிருந்து அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சாப்பிட்ட சம்பவம் கோவை மருதமலை அருகே நடந்துள்ளது.

கோவை மருதமலை, ஐஓபி காலனி பேருந்து நிலையம் அருகே ஆறுமுகம் என்பவர் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் இருந்து இன்று (டிச.20) அதிகாலை 2 மணியளவில் 4 பெண் யானைகள், ஓர் ஆண் யானை, ஒரு குட்டியானை கொண்ட கூட்டம் வெளியேறியது. இந்த யானைக் கூட்டம், ஆறுமுகத்துக்குச் சொந்தமான அரிசிக் கடையின் இரும்பு ஷட்டரைக் கால்களால் உதைத்தும் உடைத்தும் உள்ளிருந்த சுமார் 13 அரிசி மூட்டைகளை வெளியே இழுத்தன. அரிசியைச் சாப்பிட்டு மூட்டைகளைச் சேதமேற்படுத்தின.

கோவை மருதமலை, ஐஓபி காலனி பேருந்து நிலையம் அருகே உள்ள அரிசிக் கடையில் யானைகள் சேதப்படுத்தியதால் கடைக்கு முன் சிதறிக் கிடந்த அரிசி.

பின்னர், ஐஓபி காலனி தளபதி நகரில் நுழைந்த யானைகள், அங்கு பழ வியாபாரியான வள்ளிக்கண்ணு என்பவர் சாலையோரம் நிறுத்தியிருந்த தள்ளுவண்டியிலிருந்த பழங்களைச் சாப்பிட்டன. இதேபோல, பாலாஜி நகரில் ஜெயந்தி என்பவரின் தள்ளுவண்டியில் இருந்த வாழை, ஆப்பிள், கொய்யா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, தள்ளுவண்டிகளை உருட்டி சேதப்படுத்தின.

ஐஓபி காலனி, தளபதி நகரில் செல்வன் (63), அவரது மனைவி மணி (55) ஆகியோர் ஹாலோபிளாக் கற்களால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வீட்டின் பக்கவாட்டு ஹாலோபிளாக் சுவரை சுமார் எட்டடிக்கு உடைத்த யானைகள், வீட்டிலிருந்த கட்டில் பீரோ, பாத்திரப் பண்டங்களை உருட்டி, உள்ளே இருந்த அரிசி மூட்டை ஒன்றை இழுத்துச் சாப்பிட்டு, சேதப்படுத்தின.

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ''சேதமான பொருட்களின் மதிப்பைக் கணக்கிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT