மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மக்களிடம் அளித்த மனுக்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரிடம் இருந்து பெறும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. 
தமிழகம்

லால்குடி வட்டம் 2 ஆக பிரிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஜெ.ஞானசேகர்

திருச்சி: "திருச்சி மாவட்டத்தின் லால்குடி வட்டம் 2 ஆக பிரிக்கப்படவுள்ளது" என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் டிச 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களைப் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) லால்குடி வட்டம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, ஸ்ரீரங்கம் வட்டம் திருச்சி - திண்டுக்கல் சாலை தாயனூர் கேர் கல்லூரி, திருச்சி மேற்கு வட்டம் செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற்றது.

முகாம்களில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: ”மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த சிறப்பு குறைதீர் முகாம்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பெறும் மனுக்கள் மீது 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து, டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய தீர்வுகளை வழங்குவார். இதன்படி, சுமார் 30,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

லால்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய நகராட்சி அலுவலகத்துக்கு கட்டிடம் கட்டப்படும். 10 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம், புதிய அரசு கலை - அறிவியல் கல்லூரி ஆகியவை கட்டப்படும். வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் லால்குடி நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அசூர்- பஞ்சப்பூர்- வண்ணாங்கோவில்- கம்பரசம்பேட்டை- ஸ்ரீரங்கம்- நெ.1 டோல்கேட், பூவாளூர், கிளிக்கூடு வரை அரை வட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அரை வட்டச் சாலை பயன்பாட்டுக்கு வரும்போது இந்தப் பகுதி முழுவதும் வளர்ச்சி பெறும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூகூர் அல்லது இடையாற்றுமங்கலம், அன்பில், பூண்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணைக் கட்ட முடிவு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 20 கிமீ தொலைவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயிகளுக்கும் பெரிதும் பயன் கிடைக்கும். லால்குடி பூங்காவனம் தியேட்டர் முதல் தாளக்குடி வரை சாலை அகலப்படுத்தப்பட்டு புதிய சாலை அமைக்கப்படும். 90 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய லால்குடி வட்டம் 2 ஆக பிரித்து புதிய வருவாய் வட்டம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடிக்கப்பட்ட பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதுடன், மேடுபள்ளமாக உள்ள பள்ளி விளையாட்டு மைதானமும் சீரமைக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் வருங்காலத்தில் மிக முக்கிய பகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி விளங்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் காலநேரம் - உடல்நலனைப் பாராமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக உழைத்து வருகிறார். இதனால், அவரை அனைத்துத் தரப்பு மக்களும் முதல்வரைப் பாராட்டுகின்றனர். நேர்மையான நல்லாட்சியை வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்களும் நேர்மையான முறையில் பணியாற்றுவோம் ” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT