சாந்தஷீலா நாயர் 
தமிழகம்

மழைநீர் வடிகால்கள் அமைப்பது சென்னை வெள்ளத்துக்கு தீர்வாகாது; முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் திட்டவட்டம்: திறந்தவெளி கிணறுகளை செறிவூட்ட வேண்டும் என ஆலோசனை

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குமிடம் 717 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகர வெள்ளத்தை தடுக்க மழைநீர் வடிகால் அமைப்பது தீர்வாகாது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் குறைந்த மழைக்கேவெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மழைநீர் வடிந்த பிறகு, மழைநீர் வடிகால் அமைப்பதே தீர்வு என்று கருதி பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வடிகால்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. கடந்த 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சென்னையில் 306 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. அதன் பின்னர் ஏராளமான மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு, தற்போது 2,070 கி.மீ. நீளத்துக்கு 9,224 வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன.

இருப்பினும் கடந்த நவம்பரில் பெய்த மழையில், மழைநீர் தேங்கும் பகுதி 717 ஆக உயர்ந்துள்ளது. தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.878 கோடி செலவிட்ட நிலையில், 5 செமீ மழை பெய்தாலே அங்கு வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வெள்ளத்தில் பெரும்பாலான இடங்களில் மோட்டார்கள் மூலமே, ஒரு வடிகாலில் இருந்து மற்றொரு வடிகாலுக்கு நீர் அனுப்பப்பட்டது. வடிகாலில் தானாக வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொசஸ்தலையாறு, கோவளம் வடிநில பகுதிகளில் இப்போது மழைநீர் வடிகால்களை கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஆகிய பதவிகளை வகித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் கூறியதாவது:

நீரால் பாதிப்புக்கு உள்ளாகும் நகரம்

சென்னை ஒரு சமதள பகுதி. கடற்கரையோரம் அமைந்துள்ள நகரம். மழை காலங்களில் கடல் சீற்றம் அதிகம் இருப்பதால், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்வழியாக வெள்ளநீர் கடலுக்கு செல்லாமல்,கடல் நீர் உட்புகும். வடிவதற்கே சில நாட்கள் ஆகும். எனவே, மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமிடலின்போது, நீர் சார்ந்து எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் மாநகரமாக (வெள்ளம், வறட்சி) கருதி வடிவமைக்க வேண்டும்.

சமதளமான ஒரு நகரத்தில் மழைநீர்வடிகால் கட்டுவதால் வெள்ள பிரச்சினை தீராது. கான்கிரீட்டில் பெட்டி போல கட்டி, புவிஈர்ப்பு விசை அடிப்படையில் நீரை செலுத்தும் வகையில் அதை கட்டுவது தீர்வாகாது.

சென்னையில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம், மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்காக, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆலோசகர் (Consultant) வேலையை கொடுக்கிறோம். அவர்கள் சென்னையில் வசித்ததும் இல்லை. அவர்கள் பொறுப்பு உணர்வுடன் அறிக்கை அளிப்பதும் இல்லை. ஆனால் அந்த அறிக்கைப்படிதான் நாங்கள் செய்யப்போகிறோம் என அரசு முடிவெடுத்து வடிகால் கட்டுவதால் பயனளிக்காமல் போகிறது.

சில இடங்களில் மழைநீர் வடிகால் பயனளிப்பதாக கூறினாலும், அங்கிருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர், வேறு இடத்தில் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

வேளச்சேரி என்பது ஏரி. அங்கு வெள்ளத்தால் மக்கள் படும் அவதியை நான் நேரில் பார்த்ததால், சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக இருக்கும்போது, அப்பகுதியை குடியிருப்பு பகுதியாக மாற்றக் கூடாது என கடுமையாக போராடினேன். உடனே நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். இப்போது வேளச்சேரியில் என்ன நிலைமை என்பது அனைவருக்கும் தெரியும். பறக்கும் ரயில் திட்டத்தை பக்கிங்ஹாம் கால்வாய் மீது கட்ட எதிர்ப்பு தெரிவித்தேன்.

இப்போது சென்னையில் வெள்ளம் ஏற்படும் இடங்கள் தெளிவாக தெரிந்துவிட்டது. அந்த தரவுகள் அடிப்படையில் அந்தந்த பகுதி சார்ந்த குறுந்திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு இது சரியானதருணம். புதிதாக திறந்தவெளி கிணறுகளைஉருவாக்கியோ, அருகில் உள்ளவற்றில்இணைத்தோ, வெள்ளநீரை அதில் செலுத்திசெறிவூட்ட வேண்டும். பூங்காக்களில்நீர் தேங்க வாய்ப்பை ஏற்படுத்தி, அதிகநீரை தேக்கி, நிலத்துக்கு அடியில் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

இயற்கையை எதிர்க்க கூடாது

மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி போன்றஅழகுபடுத்தும் திட்டங்கள் கான்கிரீட் திட்டங்களாகவே உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கு எதிரானது. இயற்கையை எதிர்த்தால், இன்று இல்லாவிட்டாலும் நாளை இயற்கைதான் வெற்றிபெறும்.

மழைநீர் தேங்கிய பகுதியில் வார்டு பொறியாளர்கள் வெள்ள அளவை குறித்து வைத்திருக்க வேண்டும். அவர்கள்தான் வெள்ளத் தடுப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குடிநீர் இலவசமாக வழங்குவதாலும், மீட்டர் போடாததாலும் அளவுக்கு அதிகமான நீரை மக்கள் வீணடிக்கின்றனர். எனவே, நீரை சிக்கனமாக பயன்படுத்த மீட்டர் பொருத்தி பயன்பாட்டுக்கு ஏற்ப, ஏழைகள் தவிர்த்து அதிகமாக நீரை உபயோகிப்போருக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும். இதன்மூலம் குடிநீர் விநியோக அளவுகுறையும். வீடுகளில் உள்ள திறந்தவெளிகிணறு, ஆழ்துளை கிணறுகளை மக்கள்பயன்படுத்த முன்வருவார்கள். அதன் மூலம்அதன் செறிவூட்டும் திறன் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT