தமிழகம்

தோட்டத்தில் பதுக்கிய 1308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: கல்குவாரி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

விவசாயத் தோட்டத்தில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீஸார், கல்குவாரி உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி கே.நாகூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50). இவர் கஞ்சம்பட்டி பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். பாறைகளை உடைப்பதற்காக 6 பெட்டிகளில் தலா 200 ஜெலட்டின் குச்சிகள், ஒரு பெட்டியில் 108 ஜெலட்டின் குச்சிகள் என மொத்தம் 1308 ஜெலட்டின் குச்சிகளை உடுமலையில் உள்ள வெடிமருந்து விநியோகஸ்தரிடம் இருந்து பெற்றுள்ளார்.

இந்த ஜெலட்டின் குச்சிகளை கல்குவாரி அருகேயுள்ள காசிப்பட்டணத்தை சேர்ந்த விஜயபாபு (40) என்பவரின் விவசாயத் தோட்டத்தில் மின் மோட்டார் அறையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளார்.

இது குறித்து கோமங்கலம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 100 மீட்டர் வெடி மருந்து திரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, பொன்னுசாமி (50), கல்குவாரி மேஸ்திரி கனகராஜ் (60), தோட்ட உரிமையாளர் விஜயபாபு(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT