திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அருகில் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள். 
தமிழகம்

வேதகிரீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

செய்திப்பிரிவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சுவாமி தரிசனம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், மலையடிவாரத்தில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்தார். கோயிலில் இருந்த பக்தர்களிடம், அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, மலைப் பாதையை சீரமைக்கவும், கோயிலின் முன்பும் சந்நிதி தெருவிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பக்தர்களிடம் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: முதல்வரின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதன் அடிப்படையில், வேதகிரீஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்தேன். ஏற்கெனவே கோயிலில் ரோப்கார் அமைப்பதற்காக வல்லூர் குழு முதற்கட்ட ஆய்வுகளை முடித்துள்ளது. தற்போது, ரோப்காரை இயக்குவதற்கான மின் தேவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கோயிலில் கழுகு நாள்தோறும் உணவு அருந்த வரும் அற்புதம் நிகழ்வு வந்தது. கழுகு உணவு அருந்திய இடத்தை பாதுகாக்கும் வகையிலும், பக்தர்கள் அந்த இடத்தை பார்க்க வசதியாகவும் அப்பகுதியைச் சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

கிரிவலப் பாதையில் உள்ள 4 தங்கும் விடுதிகள் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கோயிலில் ஏற்கெனவே 4 தேர்கள் உள்ளன. கூடுதலாக ஒரு தேர் தேவைப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோயில் வளாகத்தில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக, அதிக திறன் கொண்ட மின் மோட்டார் நிரந்தரமாக அமைக்கப்படும். கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT