தமிழகம்

பரங்கிமலை ராணுவ அகாடமியில் இளம் வீரர்களின் சாகச பயிற்சி அணிவகுப்பு

செய்திப்பிரிவு

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளின் ஒருங்கிணைந்த சாகச பயிற்சி அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில் அவர்கள் செய்துகாட்டிய கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கான போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு இங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணியில் சேர்க்கப்படுகின்றனர். இங்கு தற்போது பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை இன்று நிறைவு செய்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைந்த சாகச பயிற்சி அணிவகுப்பு நேற்று நடந்தது. ராணுவ வீரர்கள் குதிரையில் சென்று தடைகளை தாண்டுதல், எரியும் நெருப்பில் நுழைந்து தாண்டுதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து காட்டினர். நடுவானில் பறந்து, பாரா செய்லிங் விளையாட்டிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

பைக்கில் சென்றுகொண்டே செங்கற்கள், டியூப் லைட்களை உடைப்பது, நெருப்பு வளையத் துக்குள் நுழைந்து வெளியே வருவது, தரையில் வீரர்களை படுக்கவைத்து அவர்கள் மீது பைக்கால் தாண்டுவது மற்றும் குழுவாக இணைந்து செய்த பைக் சாகசங்கள் ஆகியவை பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பெங்களூரு ராணுவ வாத்தியக் குழுவினரின் வாத்திய இசை பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. ராணுவ அதிகாரிகளின் கண்கவர் அணிவகுப் பும் நடந்தது. இதில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் பாபி மேத்யூஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT