கோவை சிங்காநல்லூரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிப்பது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி. 
தமிழகம்

இனிமேல் கட்டப்படும் அரசாங்க கட்டிடங்கள் மிகவும் தரமாக இருக்கும்: வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி உறுதி

க.சக்திவேல்

கோவை: இனிமேல் கட்டப்படும் வீட்டுவசதி வாரிய, அரசாங்க கட்டிடங்கள் மிகவும் தரமானதாக இருக்குமென உத்தரவாதம் அளிப்பதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (டிச.19) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:

சிங்காநல்லூரில் 960 வீடுகள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வசதி வாரியத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டன. அவை தற்போது மிகுந்த சேதமடைந்துள்ளன. அந்த வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை புதுப்பித்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு சென்றது. அவர் உடனடியாக தீர்வை ஏற்படுத்த குடியிருப்போரின் கருத்துகளை கேட்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இங்கு 22 பேர் அடங்கிய குழுவை குடியிருப்புகளின் உரிமையாளர்கள் அமைத்துள்ளனர். இனிமேல் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அந்த குழுவோடு ஆலோசித்து எடுக்கப்படும். ஏற்கெனவே இருந்ததைவிட மிகவும் தரமாக கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும்.

இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அவை உட்பட பல வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் பிரிவினர், மத்திய வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினருக்கு முறையே 400, 600, 800 சதுர அடியில் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே இருந்த பரப்பளவைவிட வீடுகளின் பரப்பரவை கூடுதலாக அளிக்க முயற்சிக்கப்படும்.

இனிமேல் கட்டப்படும் வீட்டுவசதி வாரிய, அரசாங்க கட்டிடங்கள் மிகவும் தரமாக இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறேன். ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, வீட்டு வசதி வாரிய தலைவர் சுன்ஜோங்கம் ஜடக்சிறு, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT