தமிழகம்

விழுப்புரத்தில் பட்டினியால் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்: கர்நாடகா, ஆந்திராவுக்கு விரைந்தது காவல்துறை

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டினியால் இறந்து கிடந்த 5 வயது சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரத்தில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்தார்.

அந்தச் சிறுவனின் அடையாளமும் தெரியாததால் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறுவனை யாரும் உரிமை கோராத நிலையில் உடற்கூராய்வில் சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுவன் ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு போலீஸ் தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிறுவன் இறந்து கிடந்த தள்ளுவண்டி, சிவகுரு என்ற சலவைத் தொழிலாளியுடையது என்பது தெரியவந்ததுள்ளது. சிவகுரு அதே இடத்தில் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தள்ளுவண்டியில் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி காலை வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்ததைப் பார்த்துள்ளார். சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கலாம் என நினைத்து எழுப்ப முயன்றார். ஆனால் சிறுவன் எழுந்து கொள்ளாததால், அக்கம்பக்கத்தினரும் திரண்டனர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் ஆய்வு செய்தபோது, ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT