தமிழகம்

15-வது கட்ட மெகா முகாமில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 15-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 19 லட்சத்து 7 ஆயிரத்து 9 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 14 மெகாதடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், 15-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த நந்திவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசிமுகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்த 15-ம் கட்ட மெகா முகாமில்19 லட்சத்து 7 ஆயிரத்து 9 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று(ஞாயிறு) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்றுசுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT