பேராசிரியர் க.அன்பழகனின் 100-வது பிறந்தநாள் தொடக்கத்தை முன்னிட்டு, சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்துக்கு அவரது பெயரை சூட்டுவதுடன், அவரதுசிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
‘இனமானப் பேராசிரியர்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட க.அன்பழகன், கடந்த 1922-ம்ஆண்டு டிச.19-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தார். தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழ்மேல் கொண்ட பற்றால், ராமையா என்ற தன் பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.
திமுக பொதுச் செயலாளராகவும், திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றிய அவர்கடந்த 2020 மார்ச் 7-ம் தேதிகாலமானார்.
இந்நிலையில், பேராசிரியர் க.அன்பழகனின் 100-வது பிறந்தநாள் தொடக்கத்தை முன்னிட்டு, அவரது பெருமைகளை நினைவுகூரும் வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
1.20 லட்சம் சதுரஅடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில் கருவூலக் கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசுசிறுசேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்துக்கு, ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என்றும் முதல்வர் பெயர் சூட்டுகிறார்.
மேலும், அன்பழகனின் நூல்களுக்கான நூல் உரிமைத் தொகையையும் அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.