தமிழகம்

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

செய்திப்பிரிவு

“அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிகளில் இனி நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவுமே நடத்தப்பட்டது. ஆனால், சமீப காலமாக கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாட்டு மாடுகளுக்கு திமில் அதிகமாக இருக்கும். வீரர்கள், அந்த திமில்களை பிடித்து அடக்குவர். அதையும் மீறி வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால், கலப்பின மாடுகளுக்கு திமில் இருக்காது. அப்படியே இருந்தாலும் குறைவாக வளர்ச்சியின்றி இருக்கும். இதை வைத்தே கலப்பின மாடுகளை கண்டறிந்து விடலாம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகளை அனுமதித்ததாகவும், அதற்கு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், தமிழக அரசு நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்க இந்த ஆண்டு முடிவெடுத்துள்ளது. மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நேற்று சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். நாட்டு மாடுகளை அபிவிருத்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

SCROLL FOR NEXT