சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் நேற்று அதிகாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். பள்ளம் ஏற்பட்ட சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சீரமைத்தனர்.
இந்த சாலையில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி இதுபோன்று பள்ளம் ஏற்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.