வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நமது கூட்டணி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று, தமாகா மாவட்டத் தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தினார்.
தமாகா 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுப்பது, கட்சியை பலப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா காலத்தில் தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து, 134 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டிருப்பது பெரிய சாதனையாகும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையைில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்குதல், கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்த வேண்டும், உச்ச நீதிமன்ற ஆணைக்கு ஏற்ப, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த வேண்டும்.
விசைத்தறி நல வாரியம் அமைக்க வேண்டும். படுகர் இன மக்களையும், நரிக்குறவர் இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, "விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது கூட்டணி வெற்றிபெற, கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து களப்பணியாற்ற வேண்டும். அந்த தேர்தலுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சட்டப்பேரவை வாரியாக புதிய உறுப்பினர்களை சேர்த்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். அடுத்தடுத்து வரும் தேர்தலில் தமாகா வெற்றிபெற இது வழிவகுக்கும்" என்றார்.