தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகர் பகுதியில் 57ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், ஐசிஎஃப் பகுதியில் இருந்து கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதிக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் இறங்கும் பகுதி அவ்வை நகர் 1-வது சாலையில் அமைகிறது.
அதனால், பாலம் அமையும்பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, 57 வீடுகளை இடிக்கத் திட்டமிட்டு, 3 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய், மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றி, வீடுகளை இடித்தனர்.
இதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், தங்கள் வீடுகளில் உள்ள உடைமைகளை வெளியில் எடுக்க வேண்டியிருப்பதால், தங்களை விடுவிக்குமாறு போலீஸாரிடம் கைதானவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, "முதலில் 14 மீட்டர் அகலத்தில் இடம்பெற்றுள்ள வீடுகளின் பகுதிகள் மட்டும் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 10-ம் தேதி மின் இணைப்பைத் துண்டித்தனர். அடுத்த நாள் நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கிறோம் என்று கூறி, வீடுகள் அனைத்தையும் அகற்றுவதாக நோட்டீஸ் ஒட்டினர். தற்போது திடீரென 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் வந்து, எங்களை வெளியேற்றி, வீடுகளை இடிக்கத் தொடங்கினர்.
உடைமைகளை எடுக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் வீடுகளைஇடித்தனர். இதை எதிர்த்துப் போராடிய பெண்களை போலீஸார் இழுத்துச்சென்று, கைது செய்தனர்.
மாற்று இடம் வழங்காததால், எங்கள் உடைமைகளுடன் வெட்டவெளியில் நிற்கதியாக நிற்கிறோம். வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. சில இடங்களில் வீடுகிடைத்தாலும், ரூ.1 லட்சத்துக்கு மேல் முன்பணமாக கேட்கின்றனர். இதனால் சிலர் கடைகளைவாடகைக்கு எடுத்து உடைமைகளை மட்டும் பத்திரப்படுத்திவிட்டு, உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். எனவே, மாற்று இடம் வழங்க வேண்டும்" என்றனர்.