தமிழகம்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டிடங்களின் தரம் குறித்து இம்மாத இறுதிக்குள் ஆய்வறிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

திருநெல்வேலியில் பள்ளியில் அடித்தளமின்றி சுற்றுச்சுவர் கட்டியதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும்போதே கழிப்பறைகள், மின்சார இணைப்புகளை முதலில் பரிசோதிக்க உத்தரவிட்டிருந்தோம். முதன்மை கல்வி அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திலும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாதுஎன்பதில் உறுதியாக உள்ளோம்.மாநிலம் முழுவதும் உள்ளஅனைத்து பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜன.3-ம் தேதி முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்க உள்ளன. எனவே, பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வாகனங்களும் ஆய்வு செய்யப்படும். ஓமைக்ரான் பரவி வரும் நிலையில், பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சூழலுக்கேற்ப முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய மாவட்டஅளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பள்ளி கட்டிடங்களின் உறுதியை ஆய்வு செய்யதுறைசார்ந்த 19 இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, வகுப்பு நடத்த கூடுதல் இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். கற்றல், கற்பித்தல் பணி தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT