தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது.
‘ஸ்கோச்’ அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான விருந்து வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனேந்திர குமார், ‘ஸ்கோச்’ அறக்கட்டளை தலைவர் சமீர் கொச்சார் ஆகியோர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினர்.
இதுதொடர்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து, சுனாமியின் போது நாகப்பட்டினத்தில் மேற்கொண்ட சிறப்பான மீட்புப் பணிகளை பாராட்டி சிறந்த சேவைக்கான விருது வழங்கியுள்ளனர். சுனாமியின்போது நான் தஞ்சாவூரில் இருந்தேன். அப்போது மீட்பு பணிக்காக என்னை நாகப்பட்டினத்துக்கு அரசு அனுப்பியது.
அதேபோல், கரோனா பெருந்தொற்று காலத்திலும் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சவாலான காலகட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைப்பதையே விருதாக நினைக்க வேண்டும். விருதை நோக்கி பணி செய்யக் கூடாது என்று எனது தாயார் சொல்லியிருக்கிறார். இந்த விருது எனக்கு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கடைநிலை ஊழியர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும்தான். அவர்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் இந்த விருது சாத்தியமில்லை. இந்த விருதை அனைவருக்கும் சமர்ப்பித்து அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.