அனைத்து மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்ற தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா வரவேற்றார். ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.எம்.வேலுமணி, வி.பார்த்திபன், எம்.நிர்மல்குமார், ஆர்.என்.மஞ்சுளா, அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ஆர்.ரகுபதி ஆகியோர் பேசினர்.
சார்பு நீதிமன்றத்தை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது: ஒட்டன்சத்திரத்தில் ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தற்போது சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர், மாவட்ட நீதிபதி ஆகியோர் தேர்வு செய்து பரிந்துரைகளை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி நீதி கிடைக்க வழிவகை ஏற்படும் என்று பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை நீதித்துறை நடுவர் ஜெ.மோகனா நன்றி கூறினார்.