விருதுநகர் மாவட்ட விளையாட்ட ரங்கில் மண்பானை மீது நின்றபடி சிலம்பம் சுற்றி 100 மாணவர்கள் சாதனை படைத்தனர்.
நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விதைகள் சிலம்பம் அகாடமி, ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவை இணைந்து இச்சாதனை நிகழ்ச்சியை நடத்தின. மண்பாண்டத் தொழிலை பாதுகாக்கவும், ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானசந்திரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நேதாஜி சிலம்பம் அகாடமி பயிற்சியாளர் வெங்கடேஸ்வரன், விருதை பட்டாளம் படை வீரர்கள் நலச் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், 100 மாணவ, மாணவிகள் மண்பானைகள் மீது ஏறி நின்று, தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். அவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன.