தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர். 
தமிழகம்

வழிகாட்டி பலகையில் ஊர் பெயரை தவறாக எழுதிய நெடுஞ்சாலை துறை: வழிதவறி சென்று பரிதவிக்கும் வாகன ஓட்டுநர்கள்

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்ட நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கிராமங்களின் பெயர் களைத் தவறாகக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்-குமுளி, ராமேசுவரம்-கொச்சி உள்ளிட்ட தேசிய நெடுஞ் சாலைகள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, எச்சரிக்கை அறிவிப்புகள், வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டு சாலையின் தரமும் மேம்படுத்தப் பட்டுள்ளன. இத்துடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலா, கோயில் விவரங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வழிநெடுகிலும் உள்ள ஊர்களுக்குச் செல்ல வழிகாட்டும் வகையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல கிராமங்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டி, செங்களத்துப்பட்டியாகவும், பெரியகுளம் அருகே உள்ள சாத்தாகோவில்பட்டி, சதகோவில் பட்டியாகவும், ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு, நரிக்குண்டு என்றும் தவறாக எழுதி வைக்கப் பட்டுள்ளன. இதுபோன்று தவறாக எழுதி வைக்கப்பட்டுள்ளதால் ஊர் பெயருக்கான பாரம்பரியக் காரணங்கள் சிதைவுறும் நிலை உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஊர்ப் பெயருக்கும் பாரம்பரிய, வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. இவற்றை குழப்பும் வகையில் இந்தப் பலகைகள் உள்ளன. கடந்த வாரம் மரிக்குண்டுவுக்கு கூகுள்மேப்பை பார்த்து வந்த ஒருவர், இங்கு பெயர் பலகையில் நரிக்குண்டு என்று எழுதி இருந்ததால் வேறு ஊர் என்று நினைத்து தொலைதூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தார். எனவே, அரசு ஆவணங்களில் உள்ளபடி சரியான ஊர்ப் பெயரைக் குறிப்பிட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT