காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன்னாள் படைவீரர்களை தேர்வு செய்துள்ளது. இதனால் பயண நேரத்தில் 2 மணி நேரம் குறையும் வாய்ப்புள்ளது.
காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்ததால், அவ்வழித்தடத்தில் 7 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு 2019 ஜூன் 1-ம் தேதி ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்று ஊரடங்கால் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கடந்த ஆக.4-ம் தேதியிலிருந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மாங்குடி மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக் கோட்டை, பேராவூரணி, பெரியக்கோட்டை, கண்டனூர், புதுவயல் உட்பட 20 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு காரைக்குடியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூரை சென்றடைகிறது.
காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளில் கேட் கீப்பர்கள் இல்லை. இதனால் தற்போது ஒவ்வொரு கிராசிங்கிலும் ரயில் வந்ததும் முதல் பெட்டியிலிருக்கும் ஊழியர் கீழே இறங்கி ரயில்வே கேட்டை அடைப்பார். பின்னர் கிராசிங்கை ரயில் கடந்ததும் கடைசி பெட்டியில் இருக்கும் ஊழியர் கீழே இறங்கி கேட்டை திறந்துவிடுகிறார். அதன் பின் ரயில் புறப்பட்டுச் செல்கிறது.
இந்த முறையால் கால விரயம் ஏற்படுகிறது. 146 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல 6 மணி நேரமாகிறது.
இந்நிலையில் 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர் களை நியமிக்க முன்னாள் படைவீரர் களை ரயில்வே நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அவர்கள் கேட் கீப்பர்களாக பணி புரியத் தொடங்கியதும் இந்த வழித்தடத்தில் ரயில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.