திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோவிந்தராஜ் வீதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள் ளது. அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அசோகன் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றினர். 17 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை யில், பள்ளி தலைமை ஆசிரியர் அசோகனை நேற்று பெற்றோர்கள் முற்றுகையிட்டு தாக்கினர். அப் போது அவர்கள் கூறும்போது, பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தலைமை ஆசிரியர் தொந்தரவு களை கொடுத்ததாகக் குற்றம்சாட்டினர்.
இதுபற்றி தகவலறிந்த ஆரணி நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெற்றோர்களின் பிடியில் இருந்த தலைமை ஆசிரியர் அசோகனை மீட்டனர். மேலும், பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் தாய் கொடுத்த புகாரின்பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியர் அசோகனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது, “மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் அசோகன் மீது புகார் வந்தது. இது தொடர்பாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் புருஷோத்தமன், துரைஅரசு ஆகியோர் விசாரணை நடத்தி, பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இதன் அடிப்படையில், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.