தமிழகம்

மன்னார்குடியிலிருந்து இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மூலம் 8 மாதங்களில் ரூ.5.85 கோடி வருமானம்: வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

எஸ்.கோபாலகிருஷ்ணன்

மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை இயக்கப்பட்ட சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு ரூ.5.85 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது. மன்னார்குடியிலிருந்து சென்னை, ஓசூர், தர்மபுரி, செட்டிநாடு, திண்டுக்கல், திருச்சி உட்பட பல இடங்களுக்கு அரிசி மற்றும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுப்பி வைத்து வருகிறது.

கடந்த ஏப்ரலில் 4 சரக்கு ரயில்கள் அளவுக்கே உணவு தானியங்கள் இயக்கம் செய்யப்பட்ட நிலையில், இது தற்போது படிப்படியாக உயர்ந்து, கடந்த நவம்பரில் மட்டும் 11 சரக்கு ரயில்களில் இயக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சராசரியாக மாதத்துக்கு 7 சரக்கு ரயில்களில் இயக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, “சரக்கு ரயில்கள் மூலம் இதுவரை 2 ஆயிரம் பெட்டிகளில் அரிசி, நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் இயக்கம் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து ரயில்வே துறைக்கு கடந்த 8 மாதங்களில்(ஏப்ரல் தொடங்கி நவம்பர் வரை) ரூ.5 கோடியே 85 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இதுகுறித்து மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த் கூறியதாவது:

வருமானம் இல்லை என்றுகூறி 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த எம்.பி டி.ஆர்.பாலு 2010-ம் ஆண்டு முதல் மீண்டும் ரயில் சேவையை மன்னார்குடிக்கு கொண்டுவந்தார். தற்போது, கூடுதல் வருவாய் தரக்கூடிய ரயில் நிலையமாக மன்னார்குடி திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது.

சரக்கு ரயில்களை கையாள்வது மட்டுமின்றி திருவாரூர் மாவட்டத்தின் பார்சல் முனையமாகவும் மன்னார்குடி திகழ்கிறது. இதன்படி, நாமக்கல்லிலிருந்து மன்னார்குடிக்கு முட்டைகள் கொண்டுவரப்பட்டு, ஜோத்பூருக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தின் வளர்ச்சியால், மன்னார்குடி நகரமும் வர்த்தக ரீதியாக வளர்ச்சி அடைந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உழைத்த ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

சுமைப்பணி தொழிலாளர் ஆறுமுகம் கூறியது: ஒரு சரக்கு ரயிலில் ஒரு லோடுக்கு நெல் என்றால் 160 லாரிகளிலும், அரிசி என்றால் 200 லாரிகளிலும் ஏற்றிவரப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதன் மூலம் லாரி தொழிலாளர்கள் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

அதேபோல, ஒரு சரக்கு ரயிலுக்கு மூட்டை ஏற்றும் பணியில் 130 தொழிலாளர்கள் வரை ஈடுபடுகின்றனர். ஒட்டுமொத்தமாக மன்னார்குடி சரக்கு ரயில் போக்குவரத்து சேவை 330 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இதற்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT