திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - குடியாத்தம் வழி தடத்தில் பச்சக்குப்பம்-அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றில் பழைய தரைப்பாலம் உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்து வந்த கனமழையால் பாலாற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. இதனால், இந்த தரைப்பாலத்தில் ஒரு மாதத் துக்கும் மேலாக போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
தற்போது, மழைப் பொழிவு குறைந்ததால் பாலாற்று தரை பாலத்தின் மீது தண்ணீர் வருவது படிப்படியாக குறைந்துள்ளது. தோல் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சரக்கு ஆட் டோக்கள், பயணிகள் ஆட்டோக் கள் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர் அனைவரும் இந்த தரைப்பாலத்தை தற்போது பயன் படுத்த தொடங்கியுள்ளனர். தனி யார் பேருந்துகளும் தரைப்பாலம் மீது இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இதுவரை இயக் கப்படாததால் பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். ஆம்பூர் போக்கு வரத்து பணிமனையில் இருந்து 2 அரசுப் பேருந்துகளும், குடியாத்தம் பணிமனையில் இருந்து 4 அரசுப் பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. தரைப்பாலத்தின் மீது தண்ணீர் வரத்து குறைந்து பல நாட்களாகியும் ஒரு அரசுப் பேருந்து கூட இந்த வழித்தடமாக இயக்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, "இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால், ஆம்பூர் - பள்ளி கொண்டா வழியாகவும், ஆம்பூர்- பேர்ணாம்பட்டு வழியாகவும் குடியாத்தம் பகுதிக்கு பயணிகள் சென்று வர வேண்டியுள்ளது. இதனால், கடும் சிரமத்தை எதிர் கொண்டு வருகிறோம். ஆகவே, பச்சக்குப்பம் - அழிஞ்சிகுப்பம் தரை பாலத்தின் வழியாக பேருந்து களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘அழிஞ்சிகுப்பம் - பச்சக்குப்பம் தரை பாலத்தின் மீது தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. ஆனால், பச்சக்குப்பம் நெடுஞ் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆம்பூருக்கு செல்லும் பிரிவு சாலையில் இரண்டு அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இவ் வழியாக பேருந்துகளை இயக்குவது சிரமமாக உள்ளது.
அதேபோல் குடியாத்தம் பகுதிகளிலிருந்து அழிஞ்சிகுப்பம் வழியாக ஆம்பூர் பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதித்து, தடுப்பு கம்பிகளை அமைத்து உள்ளதால், ஆம்பூரில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்கி வரு கின்றனர். இதனால் இந்த பகுதி யில் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.