புதுச்சேரி: பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்துக்குக் காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை பேரணி இன்று (டிச.18) நடைபெற்றது.
வெங்கடா சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து தொடங்கிய பேரணியை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார். பேரணிக்கு மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கட்சிக் கொடிகளைக் கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை ஏற்றத்துக்குக் காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனே குறைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பிச் சென்றனர். பேரணி இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சாலை வழியாக நேரு வீதி சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மிஷன் வீதி வழியாக வஉசி பள்ளி அருகே சென்ற நிலையில் அங்கு சாலையின் குறுக்கே போலீஸார் பேரிகார்டுகளைப் போட்டுத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வியுற்று இருக்கிறது. விலைவாசி உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத நிலை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படவில்லை.
பொதுச் சொத்துகளைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள். விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கிறார்கள். மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். இதைப் பற்றி மோடி கவலைப்படாமல் ஆட்சி செய்கிறார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மின் விநியோகத்தைத் தனியார் மயமாக்கும் வேலை நடக்கிறது. கரோனாவை அரசு சரியாகக் கையாளவில்லை. இந்த சமயத்தில் புத்தாண்டு கொண்டாடுவோம் எனக் கூறுகின்றனர். இப்போது ஒமைக்ரான் பரவி வருகிறது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசையும், மத்திய பாஜக அரசையும் மக்கள் தூக்கி எறிவதற்கான பேரணியை நடத்தியுள்ளோம்.’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.