சென்னை: தரமற்ற உணவு சாப்பிட்ட தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாகவும், அந்த உணவைச் சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களில் 6 பேர் இறந்துவிட்டதாகக் கூறி சக பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை செய்தி வாயிலாக அறிந்து கொண்டேன். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 6 பெண்களில் 2 பெண்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும், மீதமுள்ள 4 பேர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த 4 பேரின் நிலை என்ன? தற்போது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும். தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது தனியார் தொழிற்சாலைகளின் கடமை. எனவே தொழிலாளர்களின் உயிருடன் விளையாடாமல் அவர்களுக்குத் தரமான உணவு மற்றும் போதிய வசதிகளைத் தனியார் தொழிற்சாலைகள் ஏற்படுத்தித் தரவேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.