தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தென்னிந்தியாவில் 35 கொள்முதல் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று, தேயிலை வாரியசெயல் இயக்குநர் எம்.பாலாஜி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள இந்திய தேயிலை வாரிய மண்டல அலுவலகம் மூலமாக, தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் தரமான தேயிலை உற்பத்திசெய்வதை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, தேயிலை விற்பனை ஏல மையத்தில் தேயிலை தூள் மாதிரியை சேகரித்து, ஆய்வகத்தில் தர பரிசோதனை மேற்கொள்ளுதல், ஏல மையத்தில் விற்பனைக்கு வரும் தேயிலை தூளின் கொள்ளளவை கண்காணித்தல், சட்டரீதியாக படிவங்களை சமர்ப்பித்தல் மற்றும் தேயிலை கொள்முதல் செய்பவர்கள் உட்படஅனைத்து அம்சங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி கூறும்போது, "தென்னிந்தியாவில் உள்ள 120 தேயிலை கொள்முதல்நிறுவனங்களுக்கு தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு விதிகள் படி, உரிய காரணம் வழங்கக் கோரி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதில் காலாண்டில் ‘எஃப்’ படிவம் சமர்ப்பிக்காத தேயிலை கொள்முதல் செய்வோருக்கு, விதி மீறல் காரணத்தின் அடிப்படையில் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு விதி மற்றும் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு (திருத்தப்பட்ட) விதியின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இதில் 44 தேயிலை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், எந்தவித பதிலும் அளிக்காததால், 2-வதுமுறையாக தேயிலை வாரியம் மீண்டும் வாய்ப்பு வழங்கியது. தேயிலை கொள்முதல் செய்வோரின் காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்காத 11 தேயிலை கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பாக 46தேயிலை கொள்முதல் நிறுவனங்களுக்கு தேயிலை (சந்தைப்படுத்து தல்) கட்டுப்பாட்டு விதியின்படி உரியகாரணம் தெரிவிக்கக் கோரிவிளக்கம் கேட்கப்பட்டது. இதில், 24 நிறுவனங்கள் உரிய பதில் அளிக்காததால், அவற்றின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை தேயிலை கொள்முதல் செய்யும் 35 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது" என்றார்.