தமிழகம்

காடர் பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று தெப்பக்குள மேட்டில் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

வால்பாறை கல்லாறு காடர் பழங்குடியின மக்களுக்கு அவர்களின் பூர்வீக இடமான தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட 23 குடும்பங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பட்டா வழங்கினார்.

வனஉரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கிய இடத்தில் ஒதுக்கப்பட்ட அளவை மீறி குடிசைஅமைத்ததாக கூறி, வனத்துறை யினர் பழங்குடியினரின் 5 குடிசை களை அப்புறப்படுத்தினர். இதனிடையே, கல்லாறு காடர் பழங்குடியின மக்களின் பட்டா பிரச்னைதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், கடந்த 6-ம் தேதி ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு, பழைய கல்லாறு குடியில் இருந்த 12 ஏக்கர் நிலத்துக்கு நிகரான நிலம் தெப்பக்குளம் மேடு பகுதியில்ஒதுக்கப்படும் எனவும் அதில் பாதுகாப்பான பகுதியில் தனித்தனி யாக வீடு கட்டிக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, தெப்பக்குளம் மேடு பகுதியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் கணேசன், மாநில ஆதிதிராவிடர் பழங்குடியின நல உறுப்பினர் லீலாவதி ஆகியோர் முன்னிலையில், இடம் ஒதுக்கீடு செய்ய அளவீடு பணிகள் நடைபெற்றது.

இது குறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது,‘‘எங்களுக்கு 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பழங்குடிகளின் அறவழி போராட்டத்தால் சாத்தியமானது. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழத் தகுதியற்ற ஒரு கிராமத்தை கைவிட்டுவிட்டு வனப்பகுதிக்குள் புதியதாக ஒரு கிராமத்தை பழங்குடியின மக்கள் விருப்பப்படியே தேர்வு செய்து அதற்கு உரிய அங்கீகாரத்தையும், நிலப்பட்டாவையும் உடனடியாக வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT