சென்னை: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் 551 கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. தற்போது ரூ.8 கோடியில் கருவறை, ரூ.80 லட்சத்தில் பரிவார சன்னதிகள், விமானங்கள், ரூ.8 கோடியில் கோயிலுக்கு வடக்கு புறம் பக்தர்கள் ஓய்வு கூடம், தங்கும் விடுதி கட்டுதல், ரூ.94 லட்சத்தில் மேற்கு புறம் தேரோடும் வீதியில் கடைகள் கட்டுதல் உட்பட மொத்தம் ரூ.25 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, ஏற்கெனவே உள்ள 16 விடுதிகள், 12 காட்டேஜ்கள் ஆகியவற்றை நவீன முறையில் புதுப்பிப்பது, கோயிலை சுற்றி நீரூற்றுடன் கூடிய கண்கவர் தோற்றத்துடன் வண்ணமிகு பூங்காக்கள் அமைப்பது, பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுஆகிய பணிகள் இதன்மூலம் நடைபெற உள்ளன. இப்பணிகளுக்கு வரும் தை மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தி, முடிவை அறிவிப்பார்.
போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற அதிமுக முயற்சிக்கிறது. குறை காண முடியாத வகையில், அனைவரும் பாராட்டும்படியாக தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தங்களை அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக் கொள்வதற்காக வேண்டுமென்றே அதிமுக போராட்டம் நடத்துகிறது. இவர்களது ஏமாற்று செயலை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கோயில் இணை ஆணையர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.