போடேந்திரபுரத்தில் இரண்டாம்போக சாகுபடிக்காக வயலை உழும் பணி நடைபெறுகிறது. 
தமிழகம்

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தேனியில் இரண்டாம்போக சாகுபடி

செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் பெரியாறு அணை மூலம் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் முதல் தேனி அருகே பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயரும்போது ஜூன் முதல் தேதியில் முதல்போக சாகு படிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 14 ஆண்டுகளாக இந்த அளவு நீர்மட்டம் உயராததால் தாமதமாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் ஆண்டுதோறும் இருபோக சாகுபடி நடைபெற வில்லை. தேனி மாவட்டத்தில் இருபோக சாகுபடி 3 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்ததால் ஜூன் முதல் தேதியில் சரியான பருவத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முதல்போக சாகுபடி முடிந்துள்ள நிலையில், இரண்டாம் போகத்துக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

சின்னமனூர், வீரபாண்டி, போடேந்திரபுரம், சடையால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி முடிந்த வயல்களில் தண்ணீரைத் தேக்கி உழுது வருகின்றனர். இதில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பணி நடைபெறுகின்றன.

3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம்போக சாகுபடி நடை பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT