காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், அம்பகத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் போட்டி இன்று (டிச.17) நடைபெற்றது.
எனது பார்வையில் இந்தியா 2047, விடுதலைப் போரில் வெளிச்சத்துக்கு வராத வீரர்கள் என்ற 2 தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கடிதங்களை எழுதினர். கடிதங்களை அஞ்சல் வழியாகப் பிரதமருக்கு மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.
பள்ளியின் துணை முதல்வர் அசோகன், நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலகக் கணிகாணிப்பாளர் சி.கஜேந்திரன், காரைக்கால் உப கோட்ட அஞ்சலக ஆய்வாளர் கே.வினோத் மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் போட்டி நடைபெற்றது.
பள்ளி நூலக ஆசிரியர் த.ராஜலட்சுமி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மாணவர்கள் எழுதிய கடிதங்களைக் கொண்டு, போஸ்ட் ஆபீஸ் இண்டியா- 2047 என்ற வடிவமைப்பை மாணவர்கள் உருவாக்கியிருந்தனர்.