கோப்புப் படம் 
தமிழகம்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

சென்னை: நெல்லையில் பள்ளிக் கழிப்பறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நெல்லை மாநகராட்சியின் அருகில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது பெய்த மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளின் கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கட்டிடத்தில் நீர்க்கசிவின் காரணமாக மின் கசிவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே அரசு உடனடியாக பள்ளிக் கட்டிடங்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை பள்ளிக் கல்வித்துறையும் மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பூரண குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்."

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT