தமிழகம்

தனியாக கால் சென்டர்கள் நடத்தி போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் சோதனை

ஆர்.சிவா

சென்னை: கால் சென்டர்கள் நடத்தி போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்த நபர்களைப் பிடித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளைப் போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால் சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன.

போலியான மென்பொருளை வாங்குபவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் பெரிய அளவில் மோசடி செய்து வருகிறது. மைக்ரோசாப்ட் மென்பொருளை மிகவும் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறி, பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு வைரஸ் லிங்குடன் கூடிய போலி மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். பின்னர் கிரெடிட் கார்டு தகவல்களைப் பெற்றும், அவர்களின் கணினியில் உள்ள தகவல்களைப் பெற்றும் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் புகார் அளித்ததின் பேரில், இந்தியா முழுவதும் உள்ள காவல் துறையினர் மைக்ரோசாப்ட் பெயரில் போலியான மென்பொருளை விற்பனை செய்தவர்கள் மற்றும் கால் சென்டர் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சிபிசிஐடியின் சைபர் கிரைம் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மைக்ரோசாப்ட் பெயரில் போலியான மென்பொருள் விற்பவர்கள் மற்றும் கால் சென்டர் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் சுமார் 13 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT