தமிழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவத்தினருக்கு இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (டிச. 17) இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் சிறந்த ராணுவ அதிகாரியாகவும், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் 2010-ல் `ராணுவத்துக்கு ஊடகம் ஓர் உந்துசக்தி' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, எம்.பில். பட்டம் பெற்றவர்.

அதேபோல, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிரிகேடியர் எல்.எஸ்.ரிடரும் சென்னை பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வியியல் துறையில் `சீனாவின் விண்வெளி திறன்கள்: இந்தியாவுக்கான தாக்கங்கள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து, எம்.பில். பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், முப்படைகளின் முதல் தளபதியும், சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இதர ராணுவத்தினருக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வியியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு, துணைவேந்தர் எஸ்.கவுரி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், ராணுவ உயரதிகாரிகள் கர்னல் பிரதீப் குமார், லெப். கர்னல் வெங்கடேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில், பதிவாளர் என்.மதிவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன், பாதுகாப்பு கல்வியியல் துறைத் தலைவர் உத்தம் குமார் ஜமதக்னி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT