தமிழகம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: திருச்சியில் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்பு

ஜெ.ஞானசேகர்

திருச்சி: வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவுக்கு வங்கி தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வங்கி தனியார்மய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதைக் கண்டித்தும், மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய வங்கி தொழிற்சங்கத்தினர் இன்று தொடங்கினர்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளை வளாகத்தில், ஏஐபிஇஏ, ஏஐபிஓசி, என்சிபிஇ, ஏஐபிஓஏ, பிஇஎப்ஐ ஆகிய தொழிற்சங்கங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராமராஜூ, கணபதி சுப்பிரமணியன், சரவணன், நீலகண்ட சர்மா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வங்கி தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள், அதிகாரிகள் என 2,500-க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், சுமார் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT