சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு அரசு நிவாரண தொகை யாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரண உதவி இதுவரை கிடைக்கவில்லை. திருவொற்றியூர் கார்கில் நகர், ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், ஆதிதிராவிடர் காலனி, எர்ணாவூர் மற்றும் பல சுற்று வட்டார பகுதிகள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த பகுதி மக்களில் பலருக்கு இதுவரை நிவாரண உதவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் நேற்று காலையில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாசில்தார் சிராஜ்பாபு மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நிவாரண உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ரேஷன் கடை முற்றுகை
சென்னை ஆலந்தூர் மார்க்கோஸ் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பருப்பு, உளுந்து, எண்ணெய் போன்ற பொருட்களை விநியோகம் செய்வதில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலையில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடை ஊழியர் மனோகரிடம் வாக்குவாதமும் செய்தனர். பரங்கிமலை போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.