‘பதேர் பாஞ்சாலி’யில் ஒரு காட்சி, இயக்குநர் சத்யஜித் ரே. 
தமிழகம்

புதுவையில் சத்யஜித் ரே நூற்றாண்டு விழா: ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட 9 படங்கள் திரையிடல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சத்யஜித் ரே நூற்றாண்டை முன்னிட்டு அவர் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட 9 திரைப்படங்கள் திரையிடப்பட்டு விமரிசையான விழாவாகப் புதுவையில் கொண்டாடப்பட உள்ளது.

உலக அளவில் இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்தவர் இந்தியத் திரையுலக மேதை சத்யஜித் ரே. இவரது திரைப்படங்கள் உலகமெங்கும் திரையிடப்பட்டுப் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளன.

திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழா புதுவையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் புதுவையில் முதல் முறையாக சத்யஜித் ரே இயக்கிய 9 திரைப்படங்கள் நாளை முதல் திரையிடப்படுகின்றன. இதில் ஷியாம் பெனகல் இயக்கிய 'சத்யஜித் ரே' ஆவணப்படம் ஒன்றையும் திரை ரசிகர்கள் காணலாம்.

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் திரை அரங்கில் நடைபெற உள்ள இவ்விழாவைப் புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் மற்றும் மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

சத்யஜித் ரே நூற்றாண்டு விழா குறித்து விவரங்களைத் தெரிவித்த அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள்

அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ், விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று கூறியதாவது:

''நாளை மாலை விழா தொடங்குகிறது. இந்நிகழ்வில் திரைக்கலைஞர்கள் திரிதிமான் சேட்டர்ஜி, எடிட்டர் லெனின், ரோகிணி, இயக்குநர்கள் சிவகுமார், லெனின் பாரதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரெஞ்சு தூதர் லசி டல் போட் பரே, அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லீலா உட்பட பலர் பங்கேற்கின்றனர். மூன்று நாள் நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, வீ.பா.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை மாலை 5 மணிக்குத் தொடக்க நிகழ்வாக உலக அளவில் அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’ திரையிடப்படவுள்ளது.

டிசம்பர் 18-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘த இன்னர் ஐ’, காலை 10 மணிக்கு ‘ப்ரதித்வந்தி’, மதியம் 2.30 மணிக்கு ‘சாருலதா’, மாலை 5 மணிக்கு ‘அபராஜிதோ’, இரவு 7 மணிக்கு ‘போஸ்ட் மாஸ்டர்’, வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘அபுர் சன்ஸார்’, 11.45 மணிக்கு ஷியாம் பெனகலின் சத்யஜித் ரே ஆவணப்படம், மதியம் 2.45 மணிக்கு ‘மஹாநகர்’, மாலை 6.15 மணிக்கு ‘நாயக்’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படும்.

முதல் முறையாக சத்யஜித் ரே திரைப்படங்களைத் திரையிடுகிறோம். சத்யஜித் ரேயின் முதல் படமான ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படமானது அவரின் ‘தி அபு ட்ரைலாஜி’யின் முதல் பாகமாகும். மீதமுள்ள இரு பாகங்களான ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ ஆகிய மூன்று படங்களும் இந்நிகழ்வில் பார்க்க முடியும். ‘பதேர் பாஞ்சாலி’யில் வரும் அபு குழந்தையாகவும், இதர பாகங்களில் அபு மகனாகவும், மனிதனாகவும், இறுதியில் தந்தையாகவும் மாற்றம் பெற்ற ரேயின் உருவாக்கத்தை முழுவதாய் ரசிக்க முடியும்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT