தமிழகம்

காப்பானே கள்வனான துயர சரிதை; அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: நீர்நிலைகளில் உள்ள அரசு ஆக்கிரமிப்புகளை எப்போது மீட்போம், அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொது இடங்களும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. கனமழைக் காலங்களின்போது கடுமையாக மழைப்பொழிவைச் சந்திக்கும் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்துக் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன.

சமீபத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ''நீர்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. பழங்கால நீர்நிலைகளைப் பாதுகாப்பது மாநிலத்தின் கடமை. நீர்நிலைகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் காவலர்களாக மாநிலங்கள் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.

மேலும், தமிழகத்தில் ஏரி, குளங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி அது அனுமதிக்கப்படாது எனவும் தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். விரிவான அறிக்கையை அனுப்பிவைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கேள்வி

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதிமய்யம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து:

''நீர்நிலைகளில் உள்ள அரசு ஆக்கிரமிப்புகளை எப்போது மீட்போம்? அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?

தமிழகத்தில் 4,762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அறிக்கை அளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?''

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT