அமைச்சர் செந்தில் பாலாஜியின் பழிவாங்கும் நடவடிக்கை தான் இந்த ரெய்டுக்குக் காரணம், என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு அமைந்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சேலம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இரவு 8 மணியளவில் சோதனை முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என் வீட்டிலிருந்து ஒரு செல்போன் தவிர வேறு எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. இரண்டு கோடி ரூபாய், ஒரு கிலோ தங்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பழிவாங்கும் நடவடிக்கை தான் இந்த ரெய்டுக்கு காரணம். ஒரு திருமணத்தில் என்னையும் என் மனைவியும், என் மகனையும் ஒழிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதை எங்கள் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 20 பேர் இடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அதன்படி இன்று பழி வாங்கும் நடவடிக்கைகளாக இந்த ரெய்டு நடத்தி இருக்கிறார்.
இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. நான் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும், ஆண்டவன் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயமாக நான் இதிலிருந்து மீண்டு வருவேன். 4 கோடியே 85 லட்சம் என்பதும் கிரிப்டோகரன்சி என்பதும் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. மற்ற அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது என்ன காரணமோ தெரியாது.
ஆனால் எனக்கு செந்தில்பாலாஜியின் பழிவாங்கும் நடவடிக்கை தான் ரெய்டு நடக்க காரணம். எனக்காக காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.