மனைவி விஜயாவுடன் கமாண்டர் ஆர்.கணபதி.படங்கள்: பு.க.பிரவீண். 
தமிழகம்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நூலிழையில் உயிர் தப்பினோம்: ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கணபதி பேட்டி

ப.முரளிதரன்

சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான போரில்வெற்றி கிடைத்தாலும் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அதேநேரம், அப்போரில் உற்சாகமாக பங்கேற்று வெற்றிகரமாக கொண்டாடிய பல வீரர்கள்உள்ளனர். அந்த வகையில், சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான கமாண்டர் ஆர்.கணபதியும் ஒருவர். போரில் பங்கேற்றது குறித்து அவர் தனது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

நான் 1929-ம் ஆண்டு சென்னையில் பிறந்தேன். பிஎஸ்சி பட்டப் படிப்பு படித்தேன். எனது உறவினர்ராமசாமி அளித்த ஊக்கத்தின் பேரில், கடந்த 1954-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2 போரில் பங்கேற்றேன்.1965-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது நான் ஐஎன்எஸ்பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் துப்பாக்கி பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் கிழக்கு வங்காள விரிகுடா கடலில் பயணித்தது.அதற்கு பாதுகாப்புக்காக ஐஎன்எஸ்பிரம்மபுத்ரா கப்பல் உடன் சென்றது. அப்போது, அமெரிக்க போர்விமானங்கள் கிழக்கு கடற்பகுதியில் திடீரென பறந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

ஏனெனில், இதுகுறித்து எங்களுக்கு ரேடார் கருவி மூலம் எவ்வித முன்னெச்சரிக்கைத் தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், நாங்கள் திருப்பித் தாக்க உடனடியாக தயார் ஆனோம். அந்தத் தருணத்தில் நாங்கள் மிகவும் பதற்றமானோம். எனினும், அப்போது வீசப்பட்ட குண்டு குறிதவறி விழுந்ததால் நாங்கள் நூலிழையில் உயிர் பிழைத்தோம். எனினும், இந்தத் தாக்குதலில் எங்கள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் நாடு பொய்யான செய்தியை பரப்பியது.

அதேபோல், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் நான், குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஐஎன்எஸ் வல்சுரா கடற்படை தளத்தில் எலக்ட்ரிக்கல் ஆபீசராக பணியாற்றினேன். பாகிஸ்தான் படைகள் எங்கள் தளத்தை அவ்வப்போது குண்டுவீசி தாக்க முற்படும்.

இதனால், அந்த தளத்தில் வீடுகளுக்கு வெளியே பதுங்கு குழிகள்அமைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானில் இருந்து போர் விமானம் கிளம்பிய உடனே, ரேடார் மூலம்கண்காணிக்கப்பட்டு எங்களுக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்படும்.

உடனடியாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பதுங்கு குழியில் ஒளிந்துக் கொள்வார்கள். அதேபோல், எதிரி விமானங்கள் தாக்காமல் இருப்பதற்காக இரவு நேரங்களில் வீடுகளில் உள்ளவெளிச்சம் ஒருதுளி அளவு கூடவெளியே தெரியாமல் இருப்பதற்காக, வீடுகளில் உள்ள கதவுகள், ஜன்னல்கள் உள்ள இடங்களில் கறுப்பு காகிதங்கள் மூலம் அடைத்துவைப்போம். இதன் மூலம், நாங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பித்தோம். எனினும், அருகில் துவாரகாவில் உள்ள விமானப்படை தளம் குண்டுவீசி தாக்கப்பட்டது.

அதேபோல், இப்போரில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி என்ற போ ர் கப்பலை, பாகிஸ்தானின் டாப்னே ரக நீர்மூழ்கி கப்பல் குஜராத்தின், டையூ கடற்கரைப் பகுதியில் குண்டுவீசி தாக்கி மூழ்கடித்தது.

மேலும், இக்கப்பலின் கேப்டனாக இருந்த மகேந்திர நாத் முல்லா, கப்பல் தாக்கப்பட்டு மூழ்கிக்கொண்டிருந்த போது, ‘கப்பலில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை விட்டு நான் வர முடியாது’ எனக் கூறி அவரும் அதே கப்பலில் மூழ்கி உயிர் தியாகம் செய்தார்.

அவரது இந்த செயலுக்காக முப்படைகளில் வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் 2-வது உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 27 ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றி விட்டு கடந்த 1981-ல் ஓய்வு பெற்றேன். எனக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. இது நான் தேசத்துக்காக ஆற்றிய பணிக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். என்றார்.

92 வயதிலும் சுறுசுறுப்பு

கமாண்டர் கணபதி தனது 92-வதுவயதிலும் சுறுப்பாக உள்ளார். அண்மையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்திய 2-வது ஆப்ரிக்க ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT