சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. அதை செயல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும், அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசு உடமையாக்கப்பட்டன. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற பிறப்பித்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாததால், அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திகுமார் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக மற்றும் சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, "அதிமுக ஆட்சியில் நினைவு இல்லம் அமைக்க எடுக்கப்பட்ட முடிவை, தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். பின்னர், திமுக ஆட்சிக்கு வந்ததால், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
அதிமுக தலைமையிலான அரசின் கொள்கை முடிவு என்ற அடிப்படையிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை நிர்வாகி என்ற வகையிலும் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கில், கேவியட் மனு தாக்கல் செய்துள்ள ஜெ.தீபக் தரப்பு வழக்கறிஞர் சுதர்சனம் ஆஜராகி, "உயர்நீதிமன்ற உத்தரவுபடி சட்டப்பூர்வமான வாரிசுகளிடம் வேதா இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதிமுக மனுவில் அடிப்படை முகாந்திரம் இல்லை. மனுதாரர், வேதா நிலையம் மற்றும் ஜெயலலிதா மீதோ அல்லது அதிமுக மீதோ அக்கறை கொண்டவரோ அல்லது கையகப்படுத்தும் உத்தரவால் பாதிக்கப்பட்டவரோ இல்லை என்பதால் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக் கூடாது" என்று வாதிட்டார்.
நீதிபதிகள் கூறும்போது, "வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஒருவராக அதிமுக ஏன் இணையவில்லை? ஆட்சியில் இருந்ததால், வழக்கில் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "வேதா நிலையம் அல்லது ஜெயலலிதாவுடன், அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லை என்று கூறிவிட முடியாது. எனவே, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக நிலம்கையகப்படுத்தியதை ரத்து செய்ததனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
இதையடுத்து, அதிமுக மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசின் நிலைப்பாட்டை, பிரதான வழக்கு விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ் வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.