திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 1,374 பேருக்கு பட்டங்களை வழங்கினார். உடன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆர் இயக்குநர் அஜயகோஷ், துணைவேந்தர் கா.பிச்சுமணி உள்ளிட்டோர். படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களை தொழில்முனைவோராக மாற்ற வழிவகை: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் விளக்கம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி - “புதிய கல்விக் கொள்கையில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுத்து, அவர்களை சிறந்த தொழில்முனைவோராக மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றுதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 28-வது பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த ஆளுநர், 1,374 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: தென் தமிழகம் பெரும் உத்வேகம் அளிக்கும் மண்ணாக விளங்குகிறது. இந்த மண்ணில் இருந்து பல மகான்களும், தலைவர்களும், சிறந்த ஆளுமைகளும் உருவாகிஉள்ளனர். இந்த நாட்டையும், அதன் பண்பாட்டையும் கட்டிக்காப்பதற்கு அவர்களது தியாகம்உதவியிருக்கிறது. பாரத மாதாவுக்கு புகழ் சேர்க்கும்வகையில் பாரதி பல பாடல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்கள் நாட்டைத் துண்டாட எதிர்ப்புதெரிவித்து மிகப்பெரிய தேசியவாதியாக வ.உ.சி. திகழ்ந்துள்ளார்.

சிறந்த தேசியவாதியாகவும், கவிஞராகவும் இருந்த கவிமணி, காலனி ஆதிக்கத்துக்கு எதிராகபோராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், ஜெய்ஹிந்த் செண்பகராமன்பிள்ளை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அளித்த மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை என்று எண்ணற்றோர், இந்த பகுதியில் இருந்து உருவாகி நாட்டுக்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நமக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். இந்தப் பட்டத்தை பெறுவதற்காக நீங்கள் அளித்த உழைப்பும், அர்ப்பணிப்பும் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டு வரவும், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுத்து, அவர்களை சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது முன்னோர்களின் அறிவையும், தற்போதைய நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாரம்பரியமிக்க நமது மருத்துவ முறைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

நமது கனவு பெரியதாக இருக்கவேண்டும். அந்த கனவை நனவாக்க கடினமாக உழைக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்கினார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவுப்புல கழக (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் அ.அஜயகோஷ் பட்டமளிப்பு விழா உரையாற்றினர். பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி, பதிவாளர் அர.மருதகுட்டி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

          
SCROLL FOR NEXT