தமிழகம்

தொழிலதிபர் சி.ஆர்.சுவாமிநாதன் மறைவு: கோவை தொழில் துறையினர் இரங்கல்

செய்திப்பிரிவு

கோவை பி.எஸ்.ஜி. நிறுவன முன்னாள் முதன்மை செயல் அதிகாரியும் தொழிலதிபருமான சி.ஆர்.சுவாமிநாதன் மறைவுக்கு தொழில் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக பிரமுகரான சி.ஆர்.சுவாமிநாதன்(74), பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்தவர். இவர், நேற்று முன்தினம் காலமானார்.

மறைந்த சி.ஆர்.சுவாமிநாதன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா), கோவை மேலாண்மை சங்கம் (சிஎம்ஏ), கோவை உற்பத்தி கவுன்சில் (சி.பி.சி), அறிவியல் மற்றும் தொழில் துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் (சிடார்க்), கோயிண்டியா, ஐஐஎஃப், இந்திய இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் (ஐஎம்டிஎம்ஏ) உள்ளிட்ட அமைப்புகளின் தலைவராக இருந்தும், இந்தியத் தொழிலக கூட்டமைப்பில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பொறுப்புகளில் இருந்தும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவியவர்.

மேலும், பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர். சிறுதுளி, ராக் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளிலும் பணிகளை மேற்கொண்டவர்.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம் முடித்த சி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 1971-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. தொழிலக நிறுவனத்தில் விற்பனை பிரிவில் உதவி மேலாளராக பணியில் சேர்ந்தார். 1978-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியாக பொறுபேற்றார். பிறகு 1985-ம் ஆண்டு முதல் பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைமை கல்வி அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தொழில் துறை வளர்சிக்கு பல்வேறு வழிகளில் உதவிய அவரது மறைவுக்கு கோவை தொழில் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் பவுண்டரிமென் நிறுவனத்தின் (ஐஐஎஃப்) தேசிய பொருளாளர் குப்புசாமி கூறும்போது, “சி.ஆர்.சுவாமிநாதன் பி.எஸ்.ஜி. குழுமங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகள் வளரவும் உழைத்தவர். தொழில் துறை தவிர்த்து சமூகப் பணிகளிலும் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது மறைவு தொழில் துறைக்கு இழப்பு” என்றார்.

ஐஐஎஃப் கோவை பிரிவு தலைவர் எஸ்.பால்ராஜ் கூறும்போது, “எங்களது அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் சி.ஆர்.சுவாமிநாதன். பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதி வரை தொழில் துறையினருக்கு நல்ல ஆலோசகராகவும், நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியவர். கோவையில் பவுண்டரி துறை சார்ந்து பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப் படிப்பைக் கொண்டு வந்தவர்” என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக் கூறும்போது, “சீமாவின் முன்னாள் தலைவரான அவர், பொறியியல் உற்பத்தி துறை சார்ந்து மட்டுமல்லாது கோவை தொழில் துறையின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்” என்றார்.

SCROLL FOR NEXT