பிரதமர் மோடி திறந்து வைத்து 10 மாதங்களாகியும் புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மேரி கட்டிடம் செயல்பாட்டுக்கே வரவில்லை.
புதுச்சேரியின் தனிப்பெரு மையே இங்குள்ள பல பாரம்பரிய கட்டிடங்கள்தான். குறிப்பாக ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை உட்பட பல கட்டிடங்கள் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, பார்ப்போரை கவரும் வகையில் இருக்கும். புதுச்சேரிக்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் இக்கட்டிடங்களையும் கண்டு ரசிப்பது வழக்கம்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த மேரி கட்டிடம் மிக பழமையான கட்டிடமாக இருந்தது. பாரம்பரிய பிரெஞ்சு கட்டிடப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது.
புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த மேரி கட்டிடத்தை, அதே இடத்தில் பழமை மாறாமல் மீண்டும் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
கிரண்பேடியின் உத்தரவு
இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடியில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. சுமார் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டிடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவைகள் பாரம்பரிய பழைய கட்டிடப் பாணியில் கட்டப்பட்டன.
இந்த திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இக்கட்டிடத்தை திறக்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. ஆனால் அழைப்பிதழில் அப்போதைய ஆளுநர் கிரண்பேடி பெயர் இடம்பெறவில்லை. இதனால் இவ்விழாவை தள்ளிவைக்க கிரண்பேடி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ‘மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளை திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்’ என்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டது. இச்சூழலில் எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் பெரும்பான்மை இல்லாதததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதையடுத்து மேரி கட்டிடத்தை கடந்த பிப்ரவரி 25ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்து 10 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் மேரி கட்டிடம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
தாமதம் ஏன்?
காலதாமதம் குறித்து உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மேரி கட்டிடத்தில் இறுதி கட்டப் பணிகள் நடந்து நிறைவடைய உள்ளது. மீண்டும் புதுச்சேரி நகராட்சியிடம் இக்கட்டிடத்தை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டது.
அதே நேரத்தில் கடற்கரை யோரம் உள்ள இக்கட்டிடத்தில் அருங்காட்சியகம் அமைக்க கலைப்பண்பாட்டுத் துறை முன் வந்துள்ளது. அதற்கு உள்ளாட்சித்துறை மறுக்கிறது. அரசு இதில்இறுதி முடிவு எடுக்கும். எனினும் வரும் ஜனவரியில் மேரி கட்டி டம் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
பிரதமர் திறந்து வைத்த கட்டிடமே 10 மாதங்களாகியும் நடைமுறைக்கு வராமல் இருக்கும் சூழல்தான் புதுச் சேரியின் தற்போதைய நிலை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.