உடுமலையில் கலப்புத் திரு மணம் செய்த காரணத்துக்காக கடந்த 13-ம் தேதி பொறியியல் மாணவர் சங்கர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா பலத்த காய மடைந்தார்.
இதுகுறித்து உடுமலைபேட்டை போலீஸார் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட் சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழநி- மணிகண்டன், திண்டுக்கல்- ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டி- மணிகண்டன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த 14-ம் தேதி சின்னச்சாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மதன், மணி கண்டன், ஜெகதீசன், மற்றொரு மணிகண்டன், செல்வக்குமார் ஆகிய 5 பேரை கடந்த 10 நாட் களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சுந்தரி முன்னிலை யில் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 8-ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அன்னலட்சுமி அழைத் துச் செல்லப்பட்டார்.
மேலும் ஒருவர் கைது
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சங்கர் கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த தன்ராஜ்(23) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். உடுமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், திண்டுக்கல் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மதன், பழனியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் நேற்று உடுமலை எண் 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர். 3 நாட்கள் மட்டும் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 4 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.