தேமுதிக வேட்பாளர் தேர்வுக்கான பரிந்துரை பட்டியல் தயாரிப்புப் பணிகள் 30 சதவீதம் அளவு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்தார். இந்தக் குழுவில், தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி 10 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் வேட்பாளர் தேர்வுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிக்கு 3 பேர் வீதம் வேட்பாளர் பரிந்துரை பட்டியல் தயாராகி வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கான வேட்பாளர் பரிந்துரை பட்டியல் தயாரிப்புப் பணிகள் 30 சதவீதம் அளவுக்கு தற்போது முடிவடைந்துள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் கூறினர்.