மதுரை: வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதிக்கு, நீதிமன்ற வளாகத்தில் இனிமேல் போராட்டம் நடத்தமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்தும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிச. 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது வழக்கறிஞர் தேவேந்திரனுக்கும் மாதர் சங்கத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தேவேந்திரன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பாலபாரதி, ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் என மொத்தம் 27 போர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாலபாரதி, ஜானகி உட்பட 6 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், போராட்டத்தின் போது வழக்கறிஞர் தேவேந்திரன் எங்களை மோசமான வார்த்தைகளால் பேசினார். இதனால் அவரைக் கண்டித்து கோஷம் எழுப்பினோம். ஆனால் அவர் எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் பேரில் எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர், நீதிமன்றத்தின் முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பாலபாரதி மற்றும் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்திருப்பவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச. 23-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.