விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். விபத்தில் அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் இன்று உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமானப்படை குரூப் கேப்டன் வருண்சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், “ குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி மரணித்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் மரணித்து இருப்பது பெரும் சோகத்தை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.