சேலம்: தேர்தல் நேரத்தில் அடிக்கடி கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திமுகவால் முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அதிமுக கூட்டணியில் பாமக தற்போது இல்லை. தேர்தல் நேரத்தில் அடிக்கடி கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை. உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் கூட்டணி இல்லை என்று முன்னரே விலகிவிட்டார்கள். பாமகவிற்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என ராமதாஸ் விளக்க வேண்டும். அதை சொன்னால்தானே நாங்கள் பதில் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.