சென்னை: விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் நம்மை விட்டுப் பிரிந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் உயிர் பிழைத்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எனத் தன்னைக் குறிப்பிட்டு சசிகலா விடுத்துள்ள இரங்கல் செய்தி:
'' 8.12.2021ஆம் தேதி குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த காயத்துடன், உயிரோடு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி தற்போது அவரும் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்''.
இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.