தமிழகம்

விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு: ராமதாஸ் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். விபத்தில் அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் இன்று உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமானப்படை குரூப் கேப்டன் வருண்சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT